நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார்.

வரும் ஜூலை 11ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

நாயகன் விமல் பேசும்போது,

“இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் இரண்டு படங்கள் அல்ல.. இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன். கில்லி படத்தில் கொக்கர கொக்கரக்கோ பாடலில் நான் ஆடியிருக்கிறேன். இயக்குநர் எழிலுடன் இது எனக்கு இரண்டாவது படம். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் எழிலுடன் இணைந்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்த விலங்கு என்கிற வெப்சீரிஸ், போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் எல்லாம் சீரியஸாக இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் எழில் தேசிங்குராஜா 2 படத்திற்கு என்னை அழைத்தார். அப்படி சீரியஸாக நடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோதே அவ்வளவு ரிலாக்ஸாக, ஜாலியாக இருந்தது

இது எழில் சாரின் 25வது வருடம். அவர் இன்னும் பொன்விழா ஆண்டு காண வேண்டும். நிறைய நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த படத்தில் நடித்துள்ள ஜனாவை பொருத்தவரை எப்போதுமே ஒரு தயாரிப்பாளரின் பையன் என்பதை காட்டிக் கொண்டதே இல்லை. படம் முடிவடையும் சமயத்தில் தான் நிறைய பேருக்கு அவர் தயாரிப்பாளர் மகன் என்றே தெரிய வந்திருக்கும். அவர் இன்னும் நிறைய உயரங்களை தொட வேண்டும்” என்று பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“எழில் சாருக்கு இது 25வது வருடம். விமலை இப்படி வேட்டி சட்டையில் பார்க்கும்போது அவரது இயல்பிலும் சரி உடையிலும் சரி 100% விஜயகாந்த் மாதிரி தான் இருக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் மெலடியில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கிங். என்னை கெடுத்ததே அவர்தான். திருப்பாச்சி படத்தில் விஜய் சாருக்கு அருமையான மெலடி பாடல் ஒன்றை உருவாக்கி அதை சொல்வதற்காக அவர் கில்லி படப்பிடிப்பில் இருந்தபோது பார்க்க சென்றிருந்தேன். அங்கே வித்யாசாகர் இசையில் அப்படி போடு போடு என்கிற பாடல் காட்சி படமாகி கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நம் ரூட்டை மாற்ற வேண்டும் என நினைத்து தான், மீண்டும் அந்தப் பாடலை ‘அத்த பெத்த வெத்தலை’ என்கிற குத்துபாட்டாக மாற்றினேன். என்னை குத்துப்பாட்டு இயக்குனராக மாற்றியது வித்யாசாகர் தான். அவருடைய எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலில் கூட முதலில் சிம்ரன் நெப்போலியனும் ஆடுவதாக தான் இருந்தது அதன் பிறகு தான் ராஜூசுந்திரம் மாஸ்டர் நடித்தார். இன்றைக்கும் அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு வகையில் நானும் எழில் சாரும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறோம். நான் ஸ்கிரிப்ட் தாண்டி யாரையும் பேச விட மாட்டேன். இவர் அப்படி பேசுவதற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் பேசுவதில் இருந்து தெரிந்து கொண்டேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இயக்குநர் எழில் பேசும்போது,

“ஒரு படத்தில் நடிக்கும் போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் கிடையாது. படம் முடிந்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்வது என்பது தான் இந்த விழாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நான் இன்னொரு பட வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி அழகாக இதை முடித்துள்ளார். அந்த வகையில் சினிமாவை நேசிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். தேசிங்கு ராஜா படத்தில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது விமல். இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் அவர்தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். இத்தனை நடிகர்களை வைத்து நான் படம் பண்ணியது கிடையாது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும். மின்னல் மாதிரி போகும். வித்யாசாகர் சொன்னது போல ஒரு காமெடி சிரித்து முடிந்து உடனடியாக அடுத்த காமெடி வந்துவிடும். அவ்வளவு ஸ்பீடாக இருக்கும். இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. என்னுடைய மூன்றாவது படத்திலேயே வித்யாசாகர் இசையமைத்தார். அப்போது நல்ல பாடல்களாக கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய திறமை என்ன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை இப்போது மீண்டும் அவருடன் பணியாற்றும்போது தான் பிரமிப்பாக இருக்கிறது” என்று பேசினார்.

  • Johnson PRO