
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், “இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.
சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்டம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் ‘மைலாஞ்சி’ திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.
கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர். நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.
இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார். அந்த கதை தான் ‘மைலாஞ்சி’. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.
இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.
காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.
மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.
என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.
எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.
இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை. இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
‘வாழ்வே மாயம்’ என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.
தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

