‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சோனி மியூசிக் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் அசோக் பர்வானி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான தியாகராஜன் பேசுகையில், ”2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.

இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.

படத்தை வாங்கிய பிறகு கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் சென்றது.‌ அதன் பிறகு இடர்பாடுகள் ஏற்பட்டதன. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்தோம். குறிப்பாக இதில் ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு அதிகம். திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றி இருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த் அழகான பெண். இந்த படத்தில் அவரை இளமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.‌ லண்டனின் வீதிகளில் அவர் நடந்து செல்லும் ஸ்டைலும், அவரின் அவுட்லுக்கும் அனைவரும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

நடிகை சிம்ரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சற்று எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். அவருடைய சிறந்த நடிப்பிற்காக இந்த வருடம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் நடிகை ஊர்வசி பேசுகையில், ”தியாகராஜன் சார் மிலிட்டரி மேன் மாதிரி அனைத்தும் நேரத்திற்கு ஏற்றபடி சரியாக நடக்க வேண்டும் என நினைப்பார்.‌ 1984ம் ஆண்டில் தியாகராஜன் சார் தயாரித்த திரைப்படம் ‘கொம்பேறி மூக்கன்’ அதில் நான் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் சரிதாவும் நடித்திருந்தார்.

அன்றிலிருந்து ஆரம்பித்த அந்த மரியாதைக்குரிய அன்பும், நட்பும் இன்றும் தொடர்கிறது. பிரசாந்துடன் நான் ‘தமிழ்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவரும் எனக்கு நல்ல நண்பர். ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்த இருவருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் அடுத்த நிமிடம் எனக்காக வந்து நிற்பார்கள்.‌

அந்தகன் நல்ல படம். நம்முடைய மண்ணிற்கு என்ன தேவையோ அந்த மாற்றங்களை செய்துதான் இந்த படத்தை தியாகராஜன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அமைந்திருக்கும் நட்சத்திர கூட்டணி போல் வேறு எந்த படத்திலும் அமைந்திருக்காது., அமைந்ததும் இல்லை. இந்த படம் நன்றாக ஓட வேண்டும், ஓடும் என நம்புகிறேன் அனைவரும் வாழ்த்துங்கள்,” என்றார்.