நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசுகையில், ” சூர்யாவின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நினைத்தது நடந்துவிடும்.
‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15 வது படைப்பு இது. சூர்யாவுடனான பயணம் இனிமையானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் படக்குழுவினர் அனைவரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்த கூட்டணியை உருவாக்கினோம். மார்ச் 2024 ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு சென்றோம். கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான ’36 வயதினிலே’ படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ”நான் வாழ்க்கையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அது என் மனைவியை காதலித்தது. அன்றைய தினம் விதைத்த விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்து மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். அத்துடன் கார்த்திக் சுப்புராஜும் உறவினர் ஆனார். இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.

ராஜசேகர் என் வாழ்வில் கிடைத்த மிக இனிமையான மனிதர். இந்த படத்தில் இருந்து நாங்கள் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். சூர்யாவை போல் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியுமா! என தெரியவில்லை. மக்கள் மீதும்… ரசிகர்கள் மீதும்… அவர் காட்டும் அன்பை போல் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருந்து பெற்ற ‘ஆரா’ என் இறுதி மூச்சு வரை தொடரும். அவருடைய ‘அகரம் ‘ அலுவலகத்திற்கு ஒரு முறை தான் விஜயம் செய்தேன். எங்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்க வைத்தது அந்த சந்திப்பு. ஐ லவ் யூ சூர்யா சார். படத்தைப் பற்றி நாங்கள் எப்போதும் பேச மாட்டோம். படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் சிறப்பான- தரமான -அழகான- அன்பான – சம்பவம் இந்த படத்தில் இருக்கிறது.” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” நம்ம நெனச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடியும் திரும்புதும்மா.. முன்ன ஒரு கதை இருந்ததும்மா.. இப்போ உரு கொண்டு இறங்குதம்மா.. சூர்யாவைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. சூர்யா சாருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் நான்’ 36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதினேன்.

சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும்… ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ‘ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து’ என சொல்லியாகிவிட்டது. ‘ வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..’ எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. அவருடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி.
இந்த படத்தின் டீசரில் ‘பரிசுத்த காதல்’ வருகிறது. இந்த பரிசுத்த காதல் சந்தோஷ் நாராயணனின் பரிசுத்த காதலை சொல்கிறது. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ‘ கனிமா ..’ படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றி.. பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாக பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ்.

இந்த திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் நிறைய பாடல்கள் உண்டு . நான் மேலும் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்த மூன்று பாடல்களும் மிகச் சிறப்பானதாக இருக்கும். அவருக்கு என் நன்றி.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவார். அவர் உருவாக்கிய கதை சூழல்தான் அற்புதமான பாடல்களாக மாற்றம் பெறுகிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேசுகையில், ” முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பிதாமகன்’ பட சூர்யாவை பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூர்யாவுக்கு 17 வயசு. செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டிற்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைதுறையில் மிக உச்சத்திற்கு வருவார் என சொன்னார். சூர்யாவா? கார்த்தியா? என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யா தான் என்று சொன்னார்.
காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத்துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே.. என்றேன். அதன் பிறகு இயக்குநராக வருவாரா…? ஒளிப்பதிவாளராக வருவாரா…? எனக்கேட்டபோது, இல்லை முகத்தை தொழிலாக கொண்டிருப்பார் என்றார். அப்போது நான் நடிகராக வருவாரா? எனக் கேட்டபோது, அவர் ‘ஆம் ‘என்றார். அதுமட்டுமல்ல உங்களை விட சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார் என்றார். சூர்யாவே இதை கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.
அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.
அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவை பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா? என கேட்டார் இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். நான் அவரிடம் பேசலாமா? என கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் குளோசப் காட்சி இருந்தது. அந்த காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார். சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் கஜராஜ் பேசுகையில், ” சிவக்குமார் , நாசர் ஆகிய இருவரும் லெஜெண்ட்ஸ். நான் நடிகனாக நடித்த முதல் படத்திற்கு வாய்ப்பளித்த என் மகனும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் ‘பீட்சா’. நூறாவது படம் ‘ரெட்ரோ’. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தது தான் எனக்கு ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அனைவர் மீதும் அக்கறையும், அரவணைப்பும் கொண்டவர் சூர்யா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில், ” வந்தாரை வாழவைக்கும் தமிழகம். சினிமாவை கொண்டாடும் இந்த மண்ணில்… இந்த மேடையில்.. நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது பயந்துவிட்டேன். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோளை தான் வைத்தேன். அதை இயக்குநர் நிறைவேற்றினார். எனக்கு என் மீது நம்பிக்கையை கொடுத்த படம்.

மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ஒரு படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா? என கேட்டேன். வெற்றியை எப்படி கையாளுகிறாயோ… அதைப் பொறுத்து தான் வாய்ப்பு தொடரும் என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிக சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை.. எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா பேசுகையில், ” இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக முதலில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதில் அமீர்கான் – அக்ஷய் குமார் – அஜய் தேவகன் – போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை இந்தியா முழுவதும் தெரியும். அவர் இந்தியாவின் ஹீரோ. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும், தமிழ் மட்டும்தான் தெரியும். இருப்பினும் அரை மணி நேரம் நாங்கள் சந்தித்து பேசினோம். கார்த்திகேயன் சந்தானம் தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். நான் முதன்முதலில் இவ்வளவு பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் என்றால் சூர்யாவின் படங்கள் மட்டும் தான் தெரியும். திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் ரசிகர்களை வாழ்த்துகிறேன். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றி விழாவை மும்பையில் நடத்துகிறேன். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.

நடிகை பூஜா ஹெக்டே பேசுகையில், ” நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.

இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. டீசரில் எந்த டயலாக்குகளையும் நான் பேசவில்லை என்றாலும் இசை மூலமாக என் கதாபாத்திரத்தின் உணர்வை ரசிகர்களுக்கு சொன்ன இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு என் நன்றி. இந்த திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள்.
சூர்யா சார் இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
‘ கனிமா ‘பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.‌ ” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ” இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய முதல் பேச்சு இதுதான். வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் நன்றி. பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனை கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது பறக்க முடியாதது. எப்போதும் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது தயக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக்கியவர் சூர்யா சார்.
படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எப்படி ரியாக்ட் செய்வாரோ.. அதிலிருந்து ஒரு விசயத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து இதில் பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் என்னுடைய அம்மாவும் பாடியிருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இது ரசிகர்களுடன் மாயாஜால தொடர்பை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. கேங்ஸ்டர் படங்களை இயக்க வேண்டும் என்று வரவில்லை. கிரே ஷேடு உள்ள கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவது எனக்கு பிடிக்கும். என்னுடைய முதல் படமான பீட்சா படத்திலிருந்து ஹீரோ கேரக்டர் கிரே ஷேடு உள்ளதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.
‘இறைவி’ திரைப்படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தை ஏன் ஒரு ஆணிடம் ஒப்படைக்கிறார் என்ற கேள்வி என்னுடைய சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டில் மனைவி கூட ஏன் எப்போதும் வன்முறையான படங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறாய்… எடுத்துக் கொண்டே இருக்கிறாய்…. ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க மாட்டாயா..? எனக் கேட்பார்.
‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்திற்கு முன் எழுதினேன். நான் கதையை பற்றி முழுமையாக சொல்ல விரும்பவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தில் நானூறு பேர்களுக்கு மேல் பணியாற்றுவோம். திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மேஜிக் செய்திருப்போம். அந்த அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக தர வேண்டும் என்பதற்காகத்தான் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்வதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கத்திற்கு வாருங்கள். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும்.

நான் எழுதும் எழுத்துகளுக்கு ஒரு ஆன்மா இருக்கும் என்று உறுதியாக நம்புபவன்.‌ கதைகள் நாம் சந்திக்கும் நபர்களிடமிருந்து கிடைக்கிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தை பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதை புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இணைந்தோம். இந்த திரைப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில், ” ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் மிக குறைவாக பேசலாம் என நினைத்தேன். வேறொரு விழாவில் நிறைய பேசலாம் என்றும் நினைத்தேன். தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்திருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு முதலில் நன்றி. நன்றி.

‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்று நடிகர் ஜெயராமை தவற விடுகிறோம். நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தங்களுடைய உழைப்பை உற்சாகத்துடன் வழங்குவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நான் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக விரும்பும் நாசர் சாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய இயக்குநர் தமிழ், கருணாகரன், கஜராஜ் அப்பா, சுவாசிகா, விது, பிரேம் … இவர்களுடன் நான்கு மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

கார்த்திக் சுப்புராஜ் சிங்கிள் ஷாட்டாக எடுப்பார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி. இந்த படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி
ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.

நம்முடைய படங்கள் வட மாநிலங்களில் திரையிடப்பட்டு, அங்குள்ளவர்களின் அன்பை சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கார்த்திக்கும், ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாசிட்டிவிட்டி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும்.‌ இந்த திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கிறது.

சிறிது நாட்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை ..இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம்.‌ தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போல் நிறைய லேயர்ஸ் இருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்த விசயம் ஒன்று இதில் இருக்கிறது. நானும், பூஜாவும் பேசிக் கொண்டிருக்கும்போது தம்மம் … தி பர்பஸ்… என்பதை பற்றி பேசுவோம். இந்த வேகமான வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த ரெண்டு விசயங்கள் என்னை கவர்ந்தது.
என்னுடைய பர்பஸ் ..அகரம் பவுண்டேஷன் தான். இதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்டான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து அதன் மூலமாக எனக்கு ஒரு சக்தியை கொடுத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் பட்டதாரி ஆவார்கள். இதற்கு அகரத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் எப்போதும் பெருமிதமாக கருதுவேன்.

மே முதல் தேதியன்று வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கொண்டாடுங்கள். ஐ லவ் யூ ஆல். உங்கள் அன்பிற்கு நன்றி” என்றார்.