
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் சத்யா காரிகாலன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட இன்று அனைவரும் ஒன்றுகூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது முதல் திரைப்படத் தயாரிப்பு. நான் இதுவரை கல்வித் துறையில், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் பணியாற்றி வந்துள்ளேன். சினிமா எனக்கு ஒரு புதிய அனுபவமாக மட்டுமல்ல, அர்த்தமுள்ள ஒரு பயணமாகவும் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் முதல் அடியிலிருந்து என்னை நம்பிக்கையுடன் ஊக்குவித்து வழிநடத்தியவர் திரு. சரவணன் சார். சிலர் ஒரு கதவு இருப்பதைக் காட்டுவார்கள், சிலர் அந்தக் கதவைத் திறந்து வைப்பார்கள். ஆனால் வெகு சிலர்தான் அந்தக் கதவுக்கு அப்பால் இருக்கும் உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள். அந்த வகையில், சினிமா உலகிற்குள் எங்களை அழைத்துச் சென்ற முக்கியமான நபர் சரவணன் சார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் முதல் தயாரிப்பிலேயே நம்பிக்கையுடன் கைகோர்த்து பயணித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் அந்த நிறுவனம், எங்கள் முதல் முயற்சியில் தோளோடு தோள் நின்றது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. யுவராஜ் ஒரு தனி மனிதர் அல்ல; அவருக்குப் பின்னால் ஒரு வலுவான அணியே இருக்கிறது. நாங்களும் அவர்களுடன் இணைந்து ஒரே குடும்பமாக இந்தப் பயணத்தை தொடர்கிறோம்.
நல்ல புத்தகங்கள் ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றும் சக்தி கொண்டவை. அதுபோல, சிறந்த திரைப்படங்களுக்கும் சமூகத்தின் எண்ணங்களை மாற்றும் வலிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்களை ஒன்றிணைத்து, மாற்றத்திற்கும் ஊக்கத்திற்கும் வழிவகுப்பதே சினிமாவின் உண்மையான நோக்கம்.
அந்த வகையில், இயக்குநர் பாரி இளவழகன் அன்பே டயானா படத்தில் காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துகளை யாருக்கும் போதனை செய்யாமல், நகைச்சுவையும் எளிமையும் கலந்த திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் மதிப்புமிக்க ஆதரவும், வருகையும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுவராஜ் சார், சரவணன் சார், நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சத்யா காரிகாலன் மேம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பே டயானா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘மேஜிக்’ கதாபாத்திரத்தை என்னை நம்பி ஒப்படைத்த இயக்குநர் பாரி இளவழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பாளர் பார்த்தா, இசையமைப்பாளர் பரத் சங்கர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள், பாடகர்கள், உடை வடிவமைப்பாளர் அபி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. குறிப்பாக அபி வடிவமைத்த ஆடைகள் இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்தன.
என்னுடன் நடித்த ரோஜா மேம், சேத்தன் சார், எனது தந்தையாக நடித்த டென்வர் சார் மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் சிரித்து, கைதட்டி, ரசித்து கொண்டாடியதை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு நடிகருக்கு தனது பெயரை விட, தான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரால் ரசிகர்கள் அழைப்பது மிகப்பெரிய அங்கீகாரம். ‘மேஜிக்’ என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு சிறுமி ஓடிவந்து, “Hi Magic, you really look magical on screen” என்று கூறியதும், மற்றொரு குழந்தை “Bye Magic” என்று விடைபெற்றதும் என் மனதில் என்றும் நிற்கும் தருணங்கள்.
மேலும் பலர், ‘நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக இருந்தும் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே’ என்று பாராட்டினார்கள். அந்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தில் கோபி அண்ணா, சேத்தன் சார் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், குறிப்பாக இறுதிக்காட்சியில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு கிடைத்த கைதட்டலையும் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.
இந்த வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவு. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நீங்கள் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நான் தவறாமல் பார்த்தேன். படத்தைப் பற்றியும், ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும் நீங்கள் எழுதிய நேர்மறையான விமர்சனங்கள்தான் முதல் வாரத்தில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்களுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்தப் பயணத்தில் உங்களில் பலர் எனக்கு நண்பர்களாகவும் மாறியிருக்கிறீர்கள். அதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
பல போட்டி வெளியீடுகள் மற்றும் பிற சவால்கள் இருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வந்து படத்தை ஆதரித்தனர். கடந்த வாரம் நான் அதிகம் பயன்படுத்திய செயலி BookMyShow தான் என்று சொல்லலாம். Instagram, WhatsApp ஆகியவற்றைவிட, திரையரங்குகளில் காட்சிகள் நிரம்பி வழிவதைப் பார்ப்பதற்காக BookMyShow-வை அதிகமாகப் பார்த்தேன்.
தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வாரமும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இதே அன்புடனும் ஆதரவுடனும் அன்பே டயானா திரைப்படத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”
நடிகர் சுதர்சன் பேசியதாவது:
அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றி விழா மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை பல திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால் இன்று அதே மேடையில் இந்தப் படத்தின் நடிகராக நின்று பேசுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
முந்தைய நிகழ்ச்சியில் சசிகுமார் சார் சொன்ன செட் பிராபர்டி வசனம் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் இந்தப் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்ததில் ஒரு சிறிய பங்காக அமைந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும், அதற்கு முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றுவேன் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சேத்தன் சார், ரோஜா மேம், ரம்யா, செல் முருகன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், இசையமைப்பாளர் பரத் சங்கர், படத்தொகுப்பாளர் பார்த்தா, கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், பவா மணி அண்ணா மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சஜன், விவேக், வேணு, வெங்கட், நரேன் சார், கோபால் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”
ஈரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கலா பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இன்று அன்பே டயானா திரைப்படம் பெற்றிருக்கும் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. பெரிய படங்களின் போட்டிக்கு மத்தியில் வெளியான இந்தச் சிறிய திரைப்படம் ரசிகர்களின் ஆதரவால் வெற்றி பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது.
இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை என்னிடம் முதன்முதலாக கூறியபோதே, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இன்று அந்த நம்பிக்கை நனவாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் அப்போதே அவருக்கு வாழ்த்து சொல்லி, இந்தப் படம் வெற்றி பெறும் என்று நான் கூறியிருந்தேன்.
ஒரு நல்ல கதையை உருவாக்குவது மட்டும் போதாது; அதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். சுவையான பிரியாணியை சமைத்தாலும், அதை சரியான இடத்தில் பரிமாறினால்தான் அதன் சுவையை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். அதுபோல, அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.
இந்தப் படத்தைப் பற்றி தொடர்ந்து எழுதி, பேசி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் மிக முக்கியமான காரணம்.
அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”
தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது,
அன்பே டையானா திரைப்படத்தை இந்த அளவுக்கு வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள் அல்லது இயக்குநரின் வெற்றி மட்டுமல்ல. திரையில் தெரியாத நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பின் பலன் தான் இந்த வெற்றி. ஒரு லைட்மேன் முதல் புரொடக்ஷன் அசிஸ்டெண்ட் வரை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர்கள், கலை இயக்குநர், புரமோஷன் குழு, பி.ஆர்.ஓ., டிரைவர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி.
எங்கள் இயக்குநர் பாரி மீது ஆரம்பத்திலிருந்தே எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் சொன்ன கதையும், அதை திரையில் கொண்டு வந்த விதமும் இன்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், குறிப்பாக எங்களை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த மூத்த கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பரத் சங்கர், ஒளிப்பதிவாளர் செல்லி, எடிட்டர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர் குழு, புரொடக்ஷன் குழு, புரமோஷன் குழு என ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து பணியாற்றியதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. குறிப்பாக கடைசி நேர நெருக்கடிகளிலும் யாரும் சோர்வடையாமல், ஒரே இலக்குடன் உழைத்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்தப் படத்தை முதல் நாள் முதல் கடைசி நாள் வரை எங்களுடன் பயணித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். எங்களை நம்பி திரையரங்குகளுக்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்தான் இந்த வெற்றியின் உண்மையான காரணம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு இன்னும் நல்ல படங்களை உருவாக்கும் பொறுப்பையும் தன்னம்பிக்கையையும்
கொடுத்திருக்கிறது.
இந்த வெற்றி எங்கள் முழு குழுவிற்கும் சொந்தமானது. இதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.
இயக்குநர் பாரி இளவழகன் பேசியதாவது:
இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும் தான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனைகளும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள்தான். இந்தப் படத்தின் வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.
அதேபோல், ஜமா திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவை நான் மறக்க முடியாது. அந்தப் படம் வெளியானபோது உடனடியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அது நாளுக்கு நாள் மக்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நனவாக்கிய ரசிகர்களுக்கும், ஜமா படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அன்பே டயானா கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்கள் தற்போதைய பயணத்திற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே அவர் என் மீது வைத்த நம்பிக்கையே இன்று இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம். அன்பே டயானா படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.”
“இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் முழுமையாக மதித்தார்.
கோபி இந்தக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதேபோல், ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. முழு படப்பிடிப்பிலும் எந்தவித சிரமமும் கொடுக்காமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னுடைய இயக்குநர் குழுவினருக்கும் இந்த மேடையில் நன்றி சொல்ல விரும்புகிறேன். இணை இயக்குநர்கள் ராகேஷ், ராகுல், பிரசாந்த், தினேஷ், ராஜன், மதன் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.
குறிப்பாக ராகுல், தயாரிப்புக் குழுவிற்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய பாலமாக செயல்பட்டார். பல விஷயங்களில் எனது பணிச்சுமையை குறைத்து, தயாரிப்புக் குழுவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்து பணியாற்றினார். ராகேஷ் என்னுடன் முதல் படத்திலிருந்தே பயணித்து வருகிறார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தில் பாபா மணி செய்த பங்களிப்பை குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். பெரும்பாலான காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படமாக்கப்பட்டதால், அனுமதி பெறுவது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பேசி, அனுமதிகள், ஆவணங்கள், ஏற்பாடுகள் என அனைத்தையும் முன்கூட்டியே செய்து முடித்ததால், படப்பிடிப்பு மிகவும் சுலபமாக நடந்தது. தயாரிப்புக் குழுவின் சுமையையும் அவர் வெகுவாகக் குறைத்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதற்கு முக்கிய காரணமான வெங்கட்டுக்கு நான் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தப் படத்தை ஒரு வேலை என்ற மனநிலையுடன் அல்ல, தனது சொந்தப் படமாக நினைத்து ஒவ்வொரு போஸ்டர், வீடியோ, தியேட்டர் விஜிட் என அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் கவனித்தார். குறிப்பாக ரம்யா ரங்கநாதனின் மீதான அவரது அக்கறையும், அவருக்காக செய்த உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த நட்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.
அதேபோல், எங்கள் பி.ஆர்.ஓ. யுவராஜ் எந்த நேரத்தில் தொடர்புகொண்டாலும் உடனடியாக ஒத்துழைத்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் முதல் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”
ஈரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனர் சரவணன் பேசியதாவது:
அன்பே டயானா போன்ற தரமான, மரியாதைக்குரிய திரைப்படத்தில் எங்கள் ஈரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தையும் இணைத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேஷ், சத்யா காரிகாலன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இது எங்கள் நிறுவனத்திற்கு வாழ்நாள் பெருமையாகும். அவர்களிடம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.
எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சசிகுமார் சார், எம்.ஜி.எஸ். சிவா, டாக்டர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். அதேபோல், என் மனைவி கலாவுக்கும், என் பிள்ளைகளுக்கும் என் அன்பும் நன்றியும்.
இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பல சவால்கள் இருந்தாலும், அவற்றைக் கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, ஜனநாயகன் போன்ற பெரிய திரைப்படத்துடன் வெளியானாலும், அந்தப் படம் எங்களுக்கு போட்டியாக இல்லாமல், தமிழ்ச் சினிமாவின் திருவிழா சூழலை உருவாக்கியது. அந்தப் படத்திற்கான டிக்கெட் கிடைக்காத பலரும் அன்பே டயானா திரைப்படத்தைப் பார்த்தனர். அந்த வகையில், இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஜனநாயகன் படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில் இதுவரை பல புதிய இயக்குநர்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் யுவராஜ் கணேஷை கதாநாயகனாக வைத்து கதைகளையும் கூறியிருக்கிறார்கள். அது அவர்மீது சினிமா உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
யுவராஜைப் பற்றி ஒரு விஷயத்தை குறிப்பாகச் சொல்ல வேண்டும். டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த பிறகும், அந்த வெற்றியின் கர்வமோ, பெருமிதமோ அவரிடம் நான் ஒருபோதும் பார்க்கவில்லை. மாறாக, மிகவும் எளிமையாகவும், அடுத்த நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்தார். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘பணம் சம்பாதிப்பது எனக்கு முக்கியமல்ல. நல்ல படங்களை உருவாக்கி, மனநிறைவுடனும், நிம்மதியுடனும் வாழ்வதுதான் முக்கியம்’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாரி இளவழகன் எடுத்திருந்த ஜமா திரைப்படத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் அவர் பேசினார். ‘பாரி போன்ற திறமையான இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் பெரிய வெற்றியை அடைய வேண்டும். அவருடன் நாம் சேர்ந்து பயணிப்போம்’ என்று அவர் கூறியதை இன்று நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
அதேபோல், இந்தப் பயணத்தில் யுவராஜ் கணேஷுக்கு உறுதுணையாக நின்ற சத்யா காரிகாலனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டணிதான் அன்பே டயானா திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தத் திட்டத்தில் இணைய வேண்டாம் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். சில நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்த முக்கியமானவர்கள்கூட, ‘இந்தப் படத்தில் இருந்து விலகிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறினர். ஆனால், அந்தக் கருத்துகள் அனைத்தையும் தாண்டி, யுவராஜ் கணேஷ் மீது இருந்த நம்பிக்கையால்தான் நான் இந்தப் பயணத்தில் உறுதியாக நின்றேன்.
ஒரு மனிதரை புரிந்துகொள்ள ஒரு சம்பவம் போதும். ஆனால், நல்ல மனம், நேர்மை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகிய சிறந்த குணங்களைக் கொண்ட தயாரிப்பாளர்தான் யுவராஜ் கணேஷ். அவரைப் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. அனைவருக்கும் நன்றி.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ கடந்த ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
