இயக்குநர் டி.சமய முரளி இயக்கத்தில், வெளியாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

துறைமுகங்கள் மற்றும் சுங்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சுங்கத்துறை சோதனைகளை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கடத்தும் நெட்வொர்க் நகரை ஆட்டிப்படைக்கிறது. கடத்தல் உலகைப் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜே.டி.சக்கரவர்த்தி கேங்க் எல்லா வேலையையும் அசால்ட்டாக செய்து முடிக்கிறார். அவர் சர்வதேச அளவில் இருக்கும் லால் சிண்டிகேட்டுக்காக வேலை செய்து கொடுக்கிறார். இந்த கேங்கில் பணத்தேவைக்காக சேர்கிறார் நாயகன் சரண். அம்மா மற்றும் காதலிக்கு தெரியாமல் தவறான வழிக்கு செல்லும் நாயகன் கடத்தல் கேங்குக்கும், நேர்மையான சுங்கத்துறை அதிகாரி சமய முரளிக்கு இடையே மாட்டிக் கொள்கிறார். சுமார் 25,000 கோடி மதிப்பிலான சரக்கை கையாளும்போது நடக்கும் சம்பவங்களே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜே.டி. சக்கரவர்த்தி ‘லிங்கம்’ என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான உடல்மொழியாலும் வில்லத்தனமான பாவனைகளாலும் சிறந்த நடிப்பை வழங்கி கவனத்தை ஈர்க்கிறார். லால் அவரது வழக்கமான கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார். ராதிகா சரத்குமார் ஒரு கண்டிப்பான அம்மாவாக அவரது ஆளுமை மிக்க நடிப்பை வழங்கி ஸ்கோர் செய்கிறார். காளி வெங்கட், பாலா சரவணன், ஜாபர் சாதிக் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கவின் பாஸ்கரின் ட்ரோன் மற்றும் ஏரியல் ஷாட்கள் துறைமுகச் சூழலையும், கப்பல் கொள்கலன் பகுதியின் பிரம்மாண்டத்தையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. சாம் டேனியலின் இசையும், பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தேவையான விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இயக்குநர் டி. சமய முரளி, சர்வதேசக் கடத்தல்களின் பின்னணியில் சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் குழுக்களின் தந்திரங்கள் என பல அறியப்படாதத் தகவல்களை திரையில் கொண்டு வந்துள்ளார். ஒரு கடத்தல் உலகின் பின்னணியில் நல்ல க்ரைம் த்ரில்லர் கதையை பார்த்த உணர்வு கிடைத்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. நிச்சயம் பார்க்கலாம்.