பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் ருஹானி சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT).

ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இளம்பெண் (சாத்விகா வீரவல்லி). இவருக்கு சிறு வயது முதலே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. இப்படி இருக்கையில் சாதாரண கார் ஓட்டுநரான துல்கர் சல்மானுடன் அவருக்குத் திருமணம் நடக்கிறது. தன் மனைவியின் லட்சியத்தை அறிந்துகொள்ளும் கணவன், சமூகத்தின் விமர்சனங்களையும் பொருளாதாரத் தடைகளையும் தாண்டி அவளது கனவை எப்படி நனவாக்குகிறார் என்பதே படத்தின் கதை.

வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல், மனைவியின் கனவுக்காகத் துணைநிற்கும் கணவனாக துல்கர் சல்மான். தன் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.

அறிமுக நாயகி சாத்விகா வீரவல்லி கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான நடிப்பால் கவர்கிறார். தனது முதல் படத்தா லையே 3 படங்களை கைவசம் வைக்கும் அளவிற்கு தேர்வான நடிப்பு.

பிஜிலி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நம் மனதை கொள்ளை கொள்கிறார் ருஹானி சர்மா.

துல்கரின் அக்காவாக ஆரம்பத்தில் கொஞ்சம் நெகடிவ் ரோல் போல தெரிந்தாலும், துல்கர் அக்காவின் படிப்பு பரிபோனதை எடுத்து சொல்லும் இடத்தில் மாறி விடுகிறார். கௌதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா மற்ற நடிகர்கள் எல்லாருமே நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கிராமத்துப் பின்னணியை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இயக்குநர் பவன் சதினேனி ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணின் விண்வெளி கனவை மையமாக வைத்து ஒரு அழகான, முழுமையான, உணர்வுப்பூர்வமான படத்தை தந்திருக்கிறார். மிக அழுத்தமான திரைக்கதை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. தேவையற்ற வணிக அம்சங்களை தவிர்த்து, கதையின் மையத்திலிருந்து விலகாமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. துல்கர், சாத்வீகா கணவன் மனைவியாக இருந்தாலும் லட்சியத்துக்காக மேற்கொள்ளும் தியாகம் நெகிழ வைக்கிறது.

வன்முறை மற்றும் ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய திரை அனுபவத்தை AOT கண்டிப்பாக குடும்பங்கள் ரசிக்கும் படம்..