
அறிமுக இயக்குனர் வி ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன் ஷீலா நடித்து வெளிவந்திருக்கும் படம் “வேம்பு”.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செங்கல் சூலையில் பணியாற்றுபவரின் மகள் தான் வேம்பு.. வேம்புவிற்கு சிறு வயது முதல் இருந்தே சிலம்பம் சுற்றுவதில்
ஆர்வம் காட்டி அதனை முறையாக கற்றுக் கொண்டும் வருகிறார்..அதே ஊரில் அதே கிராமத்தில் அவரது மாமன் ஹரிகிருஷ்ணன் போட்டோ எடுக்கும் ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.. தனது மாமன் மீது காதல் இருந்தாலும் ஒரு பக்கம் சிலம்பம் துறையில் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும் என்ற ஆசையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.. வேம்புவின் அப்பாவிற்கோ தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ஊர் மக்களின் ஆசியோடு தனது மகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்.. முதலில் மறுத்தாலும் தனது லட்சியம் நிறைவேற மாமன் ஹரி கிருஷ்ணன் ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்னதால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.. இந்நிலையில் கோவில் சென்று வீடு திரும்பும் வழியில் மின்னல் அடிக்க ஹரி கிருஷ்ணனின் கண் பறிபோகிறது… தன் கணவனின் நிலையை நினைத்து கண்கலங்கும் வேம்பு கணவனுக்கு ஒத்தாசையாக இருக்கிறாள்.. சிலம்பம் துறையில் தன் ஆசை கனவு லட்சியம் எதுவும் நிறைவேறாமல் போகுமோ என்ற அச்சத்துடன், குடும்ப பாரத்தை சுமந்து நிற்கிறாள் வேம்பு.. அவளது லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதி கதை…
வேம்பு ஆக ஷீலா ராஜ்குமார்.. நடிப்பிலும் சரி சிலம்பம் சுற்றுவதிலும் சரி முறையாக பயிற்சி எடுத்து சிலம்பம் சுற்றி அசத்துகிறார்.. பள்ளி சிறுமியாக, கல்லூரி செல்லும் மங்கையாக, கணவனுக்கு மனைவியாக பல பரிணாமங்களில் அதற்கேற்றார் போல் உடல் மொழியுடன் நடித்திருக்கிறார்… கனவுகளை உள் சுமந்து கணவருக்காக போராடும் இடத்தில் மிளிர்கிறார்..
பார்வையற்றவராக ஹரி கிருஷ்ணன், மெட்ராஸ் கபாலி, ஜென்டில் உமன் போன்ற படங்களில் பார்த்திருந்தாலும், இதில் அவருக்கு நடிக்க ஸ்கோப் இருக்கும் படமாக வந்திருக்கு..
வேம்புவின் பாசக்கார அப்பா ஹரி கிருஷ்ணனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, எம்.எல்.ஏவாக வரும் மாரிமுத்து இப்படி இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கதையை உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கின்றனர்
எக்காலமாக இருந்தாலும் சரி பெண்களுக்கு தற்காப்பு மிகவும் அவசியம் என்பதனை உணர்த்தி சிலம்பாட்டத்தை மேம்படுத்தி, பெண்ணியத்தைப் பேசி எடுத்திருக்கிறார் இயக்குனர்..
சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் சில சிலவற்றில் எப்போதாவது ஒன்று முத்தாய்ப்பாய் வருகின்றன அதில் ஒரு படம் தான் வேம்பு… அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய குறிப்பாக சிறுமியர் முதல் அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய படம் வேம்பு…