இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.  கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ”செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.

கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை,” என்றார்.

தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ”நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.

நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில்  வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம்.‌ அத்துடன் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.

மேலும் இவ்விழாவில் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.

அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.

படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.

மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.