ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.., பல பிரபாலங்கள் கலந்து கொண்ட நிலயில் நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது.., 

எல்லோருக்கும் வணக்கம். தமிழில் பேச முயற்சிக்கிறேன். இந்தப்படத்தில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சி. நலன் சாருக்கும், ஞானவேல் சாருக்கும் நன்றி. இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இந்தப்படத்தில் நடிக்கும் போது டபுள் ஷிப்ட்டில்  நடித்துக்கொண்டிருந்தேன், ஒரு நாள் செட்டில் தூங்கி விட்டேன் ஆனால் எனக்காகச் சத்தம் போடாமல் லைட் செய்தார்கள் அதற்காக அனைவருக்கும்  நன்றி. இப்படத்தில் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. நலன் சார் உடன் வேலை பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும்போது சின்ன சின்ன விசயங்களையும் கவனித்துப் பாராட்டினார். சத்யராஜ் சார் ரசிகை நான் ஆனால் அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை. அது வருத்தம் தான். என் குடும்பத்தில் பலர்  சிவக்குமார் சார் ரசிகர்கள் தான். எனக்குத் தமிழ் ரசிகர்கள் தரும் அன்பு பெரிய மகிழ்ச்சி தருகிறது. கார்த்தி சார் மிகப்பெரிய ரசிகை நான், அவரை ஷீட்டிங்கில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன். அவருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது.., 

9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி. கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப்படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கார்த்தி பேசியதாவது.., 

நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள்.  எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன். நலன்  70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி  ஒரு மனிதர் இருந்தார்  என வியக்க வைத்தவர். “இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம்.  அவர் ரசிகர்கள் அன்புடன்,  அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன்.  நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும்.  இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக  மொட்டை பாஸாக நடித்துள்ளார்.  ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும். ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரின் கூட்டணியின் மாயாஜாலத்தைத் திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத்  தயாரித்திருக்கிறார்.  

இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது