
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதாபைஜூ, ராதிகா, சுனில் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
தமிழ்நாட்டில் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்று வீடு திரும்புகிறார். 42 வயதாகும் சூர்யாவிற்கு திருமணம் மீது பற்றே இல்லாமல் இருக்க அவரின் அம்மா ராதிகா வோ சூர்யாவுக்கு எப்படியாவது திருமணத்தை செய்து பார்த்து விட துடிக்கிறார். தாயின் விருப்பத்தை நிறைவேற்றவும், தங்கள் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என்ற அடிப்படையிலும் வெளிநாட்டு பெண்ணை சென்று சந்தித்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு தாய்நாடு திரும்புகிறார் சூர்யா.
இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலம், பாதிக்க, அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்த, வாடகை தாயான மமிதா பைஜுவை தேடி அமெரிக்காவுக்கு பறக்கிறார் சூர்யா.
மமிதா பைஜு வும் இந்தியா விற்கு வர, அவருக்கு குழந்தையின் மேலும் அக்குடும்பத்தின் மீதும் பாசம் வர, இங்கேயே தங்கி சூர்யாவை மனம் முடிக்க விரும்புகிறார்.. திருமணத்தில் நாட்டம் இல்லாத சூர்யா அவரை எப்படியாவது அமெரிக்காவுக்கு விரட்டி விட துடிக்கிறார். இருவரும் சேர மாட்டார்களா என்று ராதிகா ஏங்க இறுதியில் என்ன நடந்தது என்பதே கலகலப்பான மீதிக்கதை.
நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா. எமோஷனல் காட்சிகளில் கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். சூர்யாவின் அனுபவ நடிப்பு மிகப்பெரிய பலம். குடும்ப கதையில் கலக்கி விட்டார்.
படத்தின் முக்கிய வேரே மமிதாபைஜு.. அத்தனை அழகு நடிப்பில்.. முழுவதுமாக திரையை ஆக்கிரமித்து கொண்டு அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..
தனது அனுபவம் மிக்க நடிப்பால் திரையில் கூடுதல் பலம் சேர்க்கிறார் ராதிகா.
ஓரிரு காட்சிகளே வந்தாலும் ரவீனா டாண்டன் அழகு சேர்க்கிறார். சுனில் செய்யும் சிறு சிறு காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இதர நடிகர், நடிகைகளும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது. கலகலப்பு நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு காட்சிகள் படத்துக்கு பலம்.
ஒரு அழகான குடும்ப கதையில் காதல், நகைச்சுவை, எமோஷனல், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் இடம்பெறச் செய்து ரசித்து பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கலகலப்பான குடும்ப படம் 4/5
